\
israel parliament
israel parliamentx page

நாடாளுமன்றம் கலைப்பு.. தேர்தலைச் சந்திக்கும் இஸ்ரேல்.. பின்னடைவில் நெதன்யாகு!

இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அந்நாடு மீண்டும் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
Published on

இஸ்ரேலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் 120 உறுப்பினர்களில் 62 பேர் கலைப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு ஆதரவாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாக்களித்தார். இதையடுத்து, இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றக் கலைப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலில் அடுத்த பொதுத்தேர்தல் வரும் அக்டோபர் 27 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முந்தைய கடைசி மணிநேரங்களில், பிரதமர் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மற்றும் முக்கியமான மசோதாக்களை அவசரமாக நிறைவேற்றியது. ஊடகங்கள் மீதான அரசின் கண்காணிப்பை அதிகரிக்கும் மசோதாக்கள் மற்றும் நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞரின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ராணுவத்தில் தீவிரப்போக்கு யூதர்கள் சேருவதைத் தடுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த ஹமாஸ் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்க்காலச் சூழலுக்குப் பிறகு, நெதன்யாகுவின் மீதான மக்கள் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் நெதன்யாகு ஆட்சியைத் தக்கவைக்கக் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com