நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

கலைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றம்.. கடும் அதிருப்தியில் நெதன்யாகு.. அடுத்து நடக்கப்போவது என்ன?

வரும் தேர்தலில் லிகுத் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகுவே களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

Praveen Joshva L

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூவின் விருப்பத்தைப் புறக்கணித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வலதுசாரி கொள்கை உடைய லிகுட் கட்சியின் தலைவராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்டகாலம் பிரதமராகப் பணியாற்றி வரும் நபராக உள்ளார். இந்தச் சூழலில் இஸ்ரேல் நாட்டின் அடுத்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவடையவுள்ளது. வரும் தேர்தலில் லிகுத் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாகுவே களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வலதுசாரிகள் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், நேற்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பெஞ்சமின் நெதன்யாகு

தொடர்ந்து அதன்மீது வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தமுள்ள 120 உறுப்பினர்களில் 110 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு எதிராக யாரும் வாக்களிக்காத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட 10 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். எனினும், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மேலும் 3 முக்கிய வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு, அவை அனைத்திலும் இந்த மசோதா நிறைவேறுவது கட்டாயமாகும். இறுதி வாக்கெடுப்பிலும் மசோதா வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு, அடுத்த 90 நாட்களுக்குள் அங்குப் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்த விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது