முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கு இன்டர்போலின் உதவியை நாட முகமது யூனுஸின் வங்கதேச அரசின் இடைக்கால நிர்வாகம் தயாராகி வருகிறது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கு இன்டர்போலின் உதவியை நாட முகமது யூனுஸின் வங்கதேச அரசின் இடைக்கால நிர்வாகம் தயாராகி வருகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு வங்கதேச அரசு கடிதம் எழுதியுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு தஞ்சம் அளித்திருப்பது நட்புக்கும் நீதிக்கும் எதிரானது என வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாகவும் எனவே ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் கடிதத்திற்கு பதிலளித்த மத்திய அரசு, ’ஒரு நெருங்கிய அண்டை நாடாக, வங்காளதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது, அதில் அமைதி, ஜனநாயகம், உள்ளடக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை அடங்கும். அந்த நோக்கத்திற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, 2013ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட தற்போதைய ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்கீழ், நாடுகடத்தப்பட்ட ஒரு தலைவரை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை, ‘அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது’ என்று கருதப்பட்டால் அது நிராகரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ’ஷேக் ஹசீனாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கான வாரண்டின் அடிப்படையில் தப்பியோடியவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைக் கோருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது’ என அந்நாட்டு வழக்கறிஞர் காசி எம்.எச். தமீம் தெரிவித்துள்ளார்.
’சிவப்பு அறிவிப்பை பிறப்பிக்கக் கோரி தீர்ப்பாயத்தின் கைது வாரண்டுடன் இன்டர்போலுக்கு ஏற்கனவே ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியுறவு அமைச்சகம் மூலம், கைது வாரண்டிற்குப் பதிலாக தண்டனை வாரண்டின் அடிப்படையில் ஒரு புதிய சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு அந்த அமைப்பைக் கேட்போம்’ என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ‘ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேச அரசாங்கம் இந்தியாவிற்கு முறையாக கடிதம் எழுதும் என இடைக்கால நிர்வாகத்தின் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவை இந்தியா பாதுகாக்க வேண்டும் என அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். "வங்கதேசம் மற்றொரு பயங்கரவாத நாடாக, இஸ்லாமிய அரசாக உருவாகாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை என்ற சட்டவிரோத தீர்ப்பை வழங்கிய இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும். இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான தீர்ப்பு, அங்கு தற்காப்புக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.