அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், இன்று பதவி விலகினார். கடுமையான உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி அவர் பதவி விலகியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய கூட்டாளியான இவர், ஏப்ரல் 2023 முதல் அதிபர் பதவியில் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தேசிய நாடாளுமன்றமான ஜாதியா சங்சத்தின் சபாநாயகர் குடியரசுத் தலைவரின் கடமைகளை ஆற்றுவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.