நாடு திரும்பும் ஷேக் ஹசீனா? வரவேற்கும் வங்கதேசம்.. நிறைவேற்றப்படுமா தண்டனை?
2024ஆம் ஆண்டு வங்கதேச அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஷேக் ஹசீனா தாயகம் திரும்புவதை வரவேற்பதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதுடன், ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு இந்தியாவை கேட்டுக் கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், ஷேக் ஹசீனா தாயகம் திரும்பும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுவதை வரவேற்பதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமரின் தகவல் மற்றும் உத்திசார் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான், "நாங்கள் நீதியை உறுதி செய்ய விரும்புவதால், அவரது அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், அவர் திரும்புவது குறித்து அரசாங்கத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. பங்களாதேஷ் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவே இருக்கும். அவை பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, காணொளி ஒளிபரப்பு மூலமாகவும் ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில், நீதிமன்றம் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது அவரை விடுவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் டிசம்பரில் நாடு திரும்புவேன் ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார். அப்போது அவர், "நான் வங்கதேசம் திரும்பும்போது அவர்கள் என்னைக் கைது செய்யக்கூடும், அல்லது கொல்லக்கூடச் செய்யலாம். ஆனாலும், நான் அங்குச் சென்றே தீருவேன். எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அங்கு கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனக்கு மரணம் நேர்வதாக இருந்தால், எனது பெற்றோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட, அவர்களின் இரத்தம் சிந்திய எனது சொந்த மண்ணிலேயே அது நிகழ வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

