பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் எழுத்தாளருமானவர் சத்யஜித் ரே. இவருடைய தாத்தா உபேந்திர கிஷோர் ரே சவுத்ரி. இவரும் பிரபல இலக்கியவாதியாவார். இந்த நிலையில், வங்கதேசத்தின் டாக்காவிலிருந்து சுமார் 120 கிமீ வடக்கே மைமென்சிங்கில் அமைந்துள்ள உபேந்திர கிஷோர் ரே சவுத்ரியின் வீடு, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அவரால் கட்டப்பட்டது. 1947 பிரிவினைக்குப் பிறகு, இந்தச் சொத்து அரசாங்க உரிமையின்கீழ் வந்தது. மேலும் 1989இல் மைமென்சிங் ஷிஷு அகாடமியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
ஹரிகிஷோர் ரே சவுத்ரி சாலையில் அமைந்துள்ள அந்த நூற்றாண்டு பழைமையான வீடு, சுமார் 10 ஆண்டுகளாக கைவிடப்பட்டு, சீரழிந்த நிலையில் உள்ளது. ஆகையால், அதை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டது. புதிய கட்டடத்திற்காக அந்த வீடு இடிக்கப்படும் நிலையில், அதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் அதைப் பழுது பார்க்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் உதவ இருப்பதாகத் தெரிவித்தது. இதையடுத்து, அந்த வீட்டை இடிக்கும் பணியை வங்கதேசம் தற்போது நிறுத்தியுள்ளது. மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.