முகம்மது யூனுஸ் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | கவிழும் இடைக்கால ஆட்சி? கைப்பற்றப் போகிறதா ராணுவம்?

வங்கதேசத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றுகிறது என்ற யூகங்கள், அங்கு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.

இந்த நிலையில், யூனுஸின் இடைக்கால அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு ராணுவம் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, ’தேசிய குடிமக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் ஆரம்பித்தனர். அவர்கள், வங்கதேச அரசியலில் அந்நாட்டு ராணுவம் குறுக்கிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வங்கதேசம்

அதற்கேற்ப, அந்நாடு முழுவதும் பல இடங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, அந்நாட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றுகிறது என்ற யூகங்கள், அங்கு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த யூகங்கள் குறித்து முகமது யூனுஸோ அல்லது ராணுவ தளபதியோ எதுவும் விளக்கமளிக்கவில்லை. இதற்கிடையே, ஐந்து லெப்டினன்ட் ஜெனரல்கள், எட்டு மேஜர் ஜெனரல்கள் (GOCs), சுதந்திரப் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும்இராணுவத் தலைமையக அதிகாரிகள் உட்பட உயர் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம். இதுதொடர்பாகவே, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என என ராணுவ தளபதி கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, முகமது யூனுஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் வங்கதேச ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகளை வைத்து ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

வேக்கர்-உஸ்-ஜமான்

முன்னதாக வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான், ”மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்து வேறுபாட்டை களைய முடியாமல் போனால், தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொன்றுகொண்டே இருந்தால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும்” என எச்சரித்திருந்தார். இத்தகைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், யூனுஸ் விரைவில் சீனாவுக்கு பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.