வேக்கர்-உஸ்-ஜமான்  எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம் | நாட்டிற்கு ஆபத்து.. ராணுவத் தளபதி எச்சரிக்கை!

தனது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால் கடுமையான பிரச்னை உள்ளது என வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் ஒப்புக்கொண்டுள்ளார்.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், ”தனது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால் கடுமையான பிரச்னை உள்ளது” என வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் ஒப்புக்கொண்டுள்ளார்.

முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா

இதுகுறித்து ஆயுதப்படை விழாவில் பேசிய அவர், “நாம் உருவாக்கிய அராஜகத்தினை இன்று நாம் பார்த்து வருகிறோம். அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி உள்ளதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை பயப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப்படைகளுக்கு இன்னும் கடமை அதிகரித்துள்ளது. உடனடியாக மக்கள் ஒற்றுமையுடனும், நிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும். மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்து வேறுபாட்டை களைய முடியாமல் போனால், தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொன்றுகொண்டே இருந்தால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பங்குதாரர்கள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதில் மும்முரமாக இருப்பதால், குற்றவாளிகள் சூழ்நிலையை சாதகமாகக் காண்கிறார்கள். அவர்கள் எதையும் விட்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள். கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் வன்முறை, நாசவேலை, கலவரம் மற்றும் பிற வகையான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பிப்ரவரி மாதத்திற்குள் இது உச்சத்தை எட்டியதால், பாதுகாப்புப் படையினர் 'ஆபரேஷன் டெவில் ஹன்ட்' என்ற தாக்குதலைத் தொடங்க வேண்டியிருந்தது. வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் இந்த நபர்கள், நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பின் நீண்ட வரலாறு உண்டு. ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆயுதப்படைகளுக்கு காவல்துறையைப் போலவே நீதித்துறை அதிகாரங்களும் வழங்கப்பட்டன.

வேக்கர்-உஸ்-ஜமான்

இதில் குடிமக்களைக் கைது செய்வதும் அடங்கும். கட்டாயமாக காணாமல் போதல், கொலை மற்றும் குடிமக்களைச் சித்திரவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் ஏராளமாக எழுந்துள்ள நிலையில், இதுபோன்ற விஷயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நாமும் அதே சுழற்சியில் சிக்கிக் கொள்ள நேரிடும். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு, ஜெனரல் வக்கர்-உஸ்-ஜமான் வங்காளதேசத்தின் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.