இராணுவத் தலைமை தளபதி வாக்கர்-உஷ்-ஜமான் - யூனுஷ் முகநூல்
உலகம்

வங்காளதேசத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்! ஜெனரல் வாக்கர் கருத்து

வங்காளதேசத்தில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என அந்நாட்டின் இராணுவத் தலைமை தளபதி வாக்கர்-உஷ்-ஜமான் தெரிவித்துள்ளார்.

PT WEB

E.இந்து

வங்காளதேசத்தில் போராட்டங்கள் நடைபெறுவது வழக்கமான விஷயம்தான். இந்நிலையில் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வங்காளதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவை எதிர்த்து அந்நாட்டின் மாணவ அமைப்பினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக, ஷேக் ஹசினா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்காளதேசத்தில் இருந்து வெளியேறினார்.

ஷேக் ஹசினா- யூனுஷ்

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமை ஆலோசகரும், பேராசிரியருமான யூனுஷ் தலைமையிலான அமைப்பு இடைக்காலமாக வங்காளதேசத்தின் ஆட்சியை கைப்பற்றியது. இதன் பின்னர், வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெறுவது தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளிவந்தன.

இந்நிலையில், புதன்கிழமையன்று (மே 21) நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வங்காளதேசத்தின் இராணுவத் தலைமைத் தளபதி வாக்கர்-உஷ்-ஜமான், “இடைக்கால ஆட்சியில் உள்ள யூனுஷிற்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தேசத்தின் இறையாண்மையை சமரசம் செய்யும் நடவடிக்கைகளில் ராணுவம் ஒருநாளும் ஈடுபடாது. தற்போது செயல்பட்டு வரும் இடைக்கால அரசாங்கம் தேர்தல் வரை மட்டுமே செயல்படும்.

வங்காளதேசத்தில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசங்கத்தால் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். தற்போது வங்காளதேசத்தில் நடைபெறும் எந்த செயல்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து ராணுவத்திடம் எந்தவித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை” எனக் கூறினார்.

இராணுவத் தலைமை தளபதி வாக்கர்-உஷ்-ஜமான்

இராணுவத் தலைமைத் தளபதி வாக்கரின் இந்த கருத்து குறித்து தலைமை ஆலோசகரின் பத்திரிக்கை செயலாளர் ஷஃபிகுல் ஆலம், “இராணுவத் தலைமைத் தளபதி கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. தலைமை ஆலோசகரின் தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்த ஒரு பெரிய கூட்டம் நடைப்பெற்றது. இதில் இராணுவத் தலைவர், கடற்படைத் தலைவர் மற்றும் விமானப்படைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். உள்துறை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டனர். எங்கள் வெளியுறவு ஆலோசகரும் கூட கலந்து கொண்டனர். அவர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மதிப்பாய்வு செய்தனர்," எனத் தெரிவித்துள்ளார்.