”விண்வெளியில் ஆயுதங்கள்” ட்ரம்பின் 'கோல்டன் டோம்' திட்டம்.. சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு!
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ’கோல்டன் டோம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும். மேலும் இந்த திட்டத்திற்கு, அமெரிக்க விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் திட்ட மேலாளராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த லட்சிய பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி இருப்பதாகவும், இதன்மூலம் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்மூலம், ஏவுகணை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பிற்காக நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியும். எனினும், இத்திட்டம் அரசியல் ஆய்வு மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மை இரண்டையும் எதிர்கொள்வதால், அதைச் செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை சீனாவும், ரஷ்யாவும் எதிர்த்துள்ளன. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோல்டன் டோம் திட்டத்தின் மீது தீவிரமாக கவலைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்றும் விண்வெளியை ராணுவமயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
கோல்டன் டோம் திட்டத்தின் பல விவரங்கள் மற்றும் நுணுக்கங்கள் தெளிவாக இல்லை என்றும், அமெரிக்காவுடனான அணுசக்தி சமநிலை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளதாகவும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா, ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கோல்டன் டோம் திட்டம் பற்றி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் புகழ்ந்துள்ளது. கப்பலில் செலுத்தப்படும் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் அணுஆயுத ஏவுகணைகள் உள்ளிட்ட உயர்தர ஆயுதங்கள் அனைத்தையும் அழிக்கும் திறன் உடையது என்று தெரிவித்துள்ளது.