வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதால் வங்கதேசம் மீண்டும் பதற்றத்தில் இருந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் முக்கிய தலைவரான முகமது மொடலெப் சிக்தர் கொலை செய்யப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இது, வன்முறையாக மாறியது. இதையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்காவில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த நபர்கள் ஹாடியைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி, உள்ளூர் மருத்துவமனைக்குப் பிறகு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 6 நாள்கள் சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 18ஆம் தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து, வங்கதேசத்தின் பல்வேறு இடங்களில் மாணவ இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள 'புரோதோம் ஆலோ' மற்றும் 'தி டெய்லி ஸ்டார்' ஆகிய முன்னணி பத்திரிகை அலுவலகங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதில், இந்து இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக கொன்றது. இந்த நிலையில், இன்னொரு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், இன்று மதியம் 12.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணம் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டங்களைத் தூண்டியிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளது.