b2 stealth bomber pt web
உலகம்

மைக்ரோஓவன், சாக்லேட்கள், கழிவறை.. எல்லாமே இருக்கு!! B2 போர் விமானங்கள் ஒரு பார்வை

போர் என்பது எல்லா காலத்திலும் தவறுதான்.. மிகைப்படுத்திக் கூறவில்லை.. ஆனாலும், இத்தனை வசதிகளுடன் ஒரு போர் விமானம் இயங்குகிறது.. அதில் சென்று குண்டுகளை வீசுகிறார்கள்....

அங்கேஷ்வர்

அம்மாடியோவ்!! 

போருக்குப் போகிறோம்... ஒரு நாட்டை நிர்மூலமாக்கப்போகிறோம்.. 37 மணி நேரம் தரையிரங்காமல் வானத்திலேயே பறக்கப்போகிறோம்... இயக்கும் விமானோ கிட்டத்தட்ட 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.. ஆனால், பதற்றமேதும் இல்லாமல் விமானத்திலேயே இருக்கும் மைக்ரோஓவனில் நூடுல்ஸ் செய்து, மிட்டாய்களை சாப்பிட்டுக்கொண்டு, கொஞ்சநேரம் உறங்கி எழுந்து, புத்துணர்ச்சிக்காக எனெர்ஜி ட்ரிக்ஸையும் குடித்துக்கொண்டு அந்த விமானத்தையும் இயக்கி போருக்கு செல்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? போர் என்பது எல்லா காலத்திலும் தவறுதான்.. மிகைப்படுத்திக் கூறவில்லை.. ஆனாலும், இத்தனை வசதிகளுடன் ஒரு போர் விமானம் இயங்குகிறது.. அதில் சென்று குண்டுகளை வீசுகிறார்கள்....

பி 2 பாம்பர்

இஸ்ரேல்-ஈரான் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ எனும் இந்தத் தாக்குதலுக்கு பங்கர் பஸ்டர் என்ற அரியவகை வெடிகுண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்த வெடிகுண்டுகளை சுமந்துச் செல்வதற்கென்றே B2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் பயனப்டுத்தப்படுகின்றன. Northrop Grumman எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1997ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக இருக்குமென சொல்லப்படுகிறது.

2 விமானிகள் மட்டுமே.. ஏகப்பட்ட வசதிகள்

ஈரான் அணுசக்தி தளங்களை தாக்குவதற்காக அனுப்பபட்ட அமெரிக்காவின் 7 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்திலிருந்து ஜூன் 21 அன்று அதிகாலை 12:01 மணிக்குப் புறப்பட்டது. 37 மணி நேரம் 11,400 கிலோமீட்டர் தூரம் இடைநில்லாமல் பயணித்து தனது வேலைகளை முடித்துக்கொண்டு வைட்மேன் விமானப்படை தளத்தில் களமிறங்கியது. கன்சாஸ் நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 117 கிமீ தொலைவிலுள்ள இந்த வைட்மேன் விமானப்படை தளத்தில்தான் B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்களை இயக்கும் அமெரிக்காவின் ராணுவப்பிரிவான 509 ஆவது குண்டுவீச்சுப் பிரிவு அமைந்திருக்கிறது.

பி2 விமானத்தை இயக்கும் விமானிகளும் இதற்கென்றே பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள். நீண்டதூரம் பயணம் என்பதால் வழியிலேயே, அதாவது வானத்திலேயே பலமுறை எரிபொருள் நிரப்பிக்கொள்ளப்படும். 2 விமானிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் நீண்ட தூர பயணங்களை முடிக்க அதிகமான ஆட்டோமேஷன் செயல்பாடுகளை நம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விமானிகளில் வேலை குறைக்கப்படுகிறது.. எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ரேடார் போன்றவற்றில் சிக்காமல் இருப்பதற்கான தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில்தான் இந்தியவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த நோஷிர் கவுடியா தனது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். Northrop Grumman நிறுவனத்தில் பணியாற்றிய அவர், சீனாவிற்காக உளவு பார்த்ததாகப் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளக்காரன் வெள்ளக்காரன்தான்

இந்த பி2 குண்டு வீச்சு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டவை என்பதால், மினி குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் போன்றவை அமைந்திருக்கும். அதேபோல, நெடுந்தூர விமானங்களில் இருப்பதுபோல் கழிவறைகளும் இருக்கும். ஒரு விமானி விமானத்தை இயக்கும்போது மற்றொருவர் ஓய்வெடுப்பதற்கான வசதிகளும் உள்ளன. அதாவது மடிக்கக்கூடிய படுக்கை வசதிகளையும் கொண்டுள்ளன.

2008 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் ஒரு விமானம் மட்டும் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. தற்போது அமெரிக்காவிடம் 9 பி2 விமானங்கள் உள்ளன. நமது ஊர்களில் பொதுவான வசனம் உண்டு.. ‘வெள்ளக்காரன் வெள்ளக்காரன் தான்யா’ என.. ஒவ்வொரு விஷயத்திலும் நிரூபிக்கின்றனர்...