மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. 1989 முதல் 2026 வரை ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரமும் இவர் கையில் தான் இருந்தது. இந்தசூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெடித்த வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. தொடர்ந்து, அயதுல்லா காமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் உச்சத்தலைவராக பதவியேற்று இருக்கிறார்.
எனினும், போர் சூழல் காரணமாக காமேனியின் இறுதி சடங்கு 3 மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்துவந்த நிலையில் தான், அயதுல்லா காமேனியின் இறுதி ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஈரான் செய்து வருவதாக ஊடகங்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தசூழலில் தான், அயதுல்லா காமேனியின் இறுதி சடங்கு தொடர்பான அறிவிப்பைஇன்று ஈரான் வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்தான அறிக்கையில், ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் அய்துல்லா காமேனியின் இறுதி ஊர்வலம் நடக்கும் எனவும் ஜூலை 9ம் தேதி மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா அவர்களின் புனித ஆலயத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமேனியின் இறுதிச்சடங்கில் ஈரான் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2 கோடி பேர் வரை பங்கேற்க வாய்ப்பிருப்பதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.