வங்கதேசத்தின் மத்திய பகுதியில், புரிகங்கா நதிக்கு அருகில் அமைந்துள்ளது தலைநகர் டாக்கா. தலைநகரின் மையப்பகுதியில் செல்வந்தர்கள் வாழக் கூடிய குல்ஷன் என்ற பகுதிக்கும், பனானி என்ற பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது ஒரு கோரைல் என்ற பகுதி. குறுகலான இடம், அடுக்கடுக்கான கூரை மற்றும் தகரக் கொட்டகைகள் வேயப்பட்ட வீடுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி ஒரு கோர விபத்து ஏற்பட்டது. வேலைக்குச் சென்றிருந்த குடும்பங்கள் வீடு திரும்பும் வேளையில் வானுயர கரும்புகை எழ, வீடுகளை தனக்கு இரையாக்கி மென்று தின்றுகொண்டிருந்தது தீ. இந்த விபத்தில், இருப்பினும், 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்தன. இருந்த ஒற்றை வீட்டையும் இழந்த பாமர மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
கோர தீ விபத்து வீடுகளை சூறையாடிய நிலையில், அன்று இரவு மேற்கூரையற்ற வீட்டில் படுத்துறங்கிய ஒரு குடும்பத்தை புகைப்படக் கலைஞர் பினு ரஹ்மான் படம் பிடித்தார். தீயால் சேதமடைந்த நான்கு சுவர்களுக்கு நடுவே, மிஞ்சிய சில தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவே தரையில் பாயை விரித்து மூன்று குழந்தைகளுடன் தாய், தந்தை உறங்கிக் கொண்டிருந்த புகைப்படம் தான் அது. மேற்கூரை இல்லாத வீட்டில் மேல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், தீயால் சேதமடைந்த தகர ஷீட்கள் வீட்டிற்கு வெளியே கிடக்கின்றன. நடந்த கோர விபத்தின் தீவிரத்தையும், தாக்கத்தையும் காட்டக் கூடிய இந்த புகைப்படம் துபாயில் நடந்த சர்வதேச புகைப்பட விருது வழங்கும் விழாவான ஹிப்பாவில் சிறந்த புகைப்படமாக முதல் பரிசை வென்றிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில், குடும்பம் என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட போட்டியில், முதல் பரிசு வென்ற பினு ரஹ்மானுக்கு 2 லட்சம் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது கரு முட்டையைக் காக்கும் நண்டு, காசா போரின் தாக்கத்தை பிரதிபலிக்கும் புகைப்படம் ஆகியவற்றுக்காகவும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. சுபஜித் தத்தா என்ற இந்திய புகைப்படக் கலைஞருக்கும் வேறு ஒரு பிரிவில் மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.