அந்தோணி அல்பானீஸ் x page
உலகம்

ஆஸ்திரேலியா | மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல்.. ஆளும் கட்சிக்கு நெருக்கடி!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Prakash J

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்துவருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து, இந்த தேர்தல், அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல்-நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல்-நேஷனல்ஸ் பெரும்பான்மையைப் பெறாவிட்டால், சுயேச்சை எம்பிக்கள் ஆளும் கூட்டணியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அந்தோணி அல்பானீஸ்

ஆட்சி அமைக்க கட்சிகள் மொத்தமுள்ள 150 இடங்களில் 76 இடங்களைப் பெற வேண்டும். அதேநேரத்தில், இந்த பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023-ம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.