ஆஸ்திரேலியா | கொளுத்திய வெப்ப அலை.. மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர்!
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. மறுபுறம் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியின்போது வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர், ஜுனைத் ஜாபர் கான் (40). இவர், கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய குடிபெயர்ந்தார். அப்படியே கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டு விளையாடி வந்தார். இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் உள்ளூர் அணிகளில் இடம்பெற்று விளையாடி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்தார்.
உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். 41.7°C வெப்பநிலையில் அவர் விளையாடியதாலேயே இந்த இறப்பு எற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஊடகங்களின்படி, போட்டி வெப்பமான சூழ்நிலையில் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அடிலெய்டு டர்ஃப் கிரிக்கெட் சங்கத்தின் விதிகளின்படி, வெப்பநிலை 42°C க்கு மேல் சென்றால் போட்டிகள் ரத்து செய்யப்படும் அல்லது பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால், அன்றைய தினம் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.