காசா pt web
உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தம் போட்ட பின்பும் மீண்டும் தாக்குதல்.. காசாவில் மீண்டும் பதற்றம்

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது.

திவ்யா தங்கராஜ்

இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த 15 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் பலர் உயிரிழந்த நிலையில், பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பிணையக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் காசா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் காசா போரில் இதுவரை 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. குறிப்பாக கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இரு தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து , போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.

முதற்கட்டமாக 737 சிறை கைதிகளை விடுவிக்கும் முடிவுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்து அதற்கான அறிக்கையையும் வெளியிட்டது. பாலஸ்தீனியர்கள் பலர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் காசாவில் 115 பேர் கொல்லபட்டுள்ளனர். இதில் 28 குழந்தைகள், 31 பெண்கள் அடங்குவர். 265 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பது அங்கு தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.