Pakistan web
உலகம்

பாகிஸ்தான்| ராணுவத்தினரை குறிவைத்து ஓடும் ரயில் மீது தற்கொலைப் படை தாக்குதல்.. 24 பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் மீது மோதியதில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தலைநகரான குவெட்டா அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை குறிவைத்து வெடிபொருள் நிரப்பிய கார் ரயில் பெட்டியுடன் மோதியதால் இரண்டு பெட்டிகள் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தன.

தென்மேற்கு பாகிஸ்தான் நகரமான (பலுசிஸ்தான் தலைநகரம்) குவெட்டாவில் (Quetta) ஞாயிற்றுக்கிழமையன்று ரயில் தண்டவாளத்திற்கு அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

pakistan

குவெட்டாவில் உள்ள சமன் படக் ரயில் நிலையம் அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று திடீரென ஓடும் ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி வெடித்ததால் இந்த மாபெரும் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறைக்காகப் பயணித்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைத்தே இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த பயங்கர குண்டுவெடிப்பின் தாக்கத்தால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டுத் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.

மேலும் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்ததுடன், அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இக்கோர சம்பவத்தைத் தொடர்ந்து குவெட்டாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்து நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே, 'பலூச் விடுதலை இராணுவம்' (BLA) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவ வீரர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட, இது ஒரு 'ஃபிதாயீன்' (fidayeen) அல்லது தற்கொலைத் தாக்குதல் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.