முடிவுக்கு வரும் போர்.?யுரேனியத்தை ஒப்படைக்கும் ஈரான்!
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், வளைகுடா முழுவதும் மறைமுக மோதல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
இந்தநிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது. இப்பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதனை ஈரான் ஒத்து கொள்ளாததால் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் மேற்கு ஆசிய மோதலை முடிவுக்கு கொண்டு வர போர் நடவடிக்கைகளை நிறுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா மற்றும் ஈரான் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும் நிலையில் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், யுரேனியத்தை அகற்றுவதற்கான துல்லியமான வழிமுறை குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் யுரேனியத்தை எவ்வாறு இடமாற்றம் செய்வது, நீர்த்துப்போகச் செய்வதா அல்லது வேறு ஏதேனும் வகையில் செயலிழக்கச் செய்வதா என்பது குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் அடுத்தகட்டச் சுற்றில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான், சுமார் 10,000 கிலோகிராம் அளவிலான மொத்த செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பைக் கொண்டுள்ளது . சர்வதேச அணுசக்தி முகமையின்படி, இதில் ஏறத்தாழ 440 கிலோகிராம் 60% வரை தூய்மையான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியமும், சுமார் 184 கிலோகிராம் 20% தூய்மையான செறிவூட்டப்பட்ட யுரேனியமும, அடங்கும். இந்த யுரேனியம் இருப்பை மேலும் 90% தூய்மையாக செறிவூட்டுவதன் மூலம், பல அணு ஆயுதங்களை உருவாக்க முடியும்.
இந்த யுரேனியத்தின் பெரும்பகுதி இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தில் பூமிக்கடியில் சேமிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. பேச்சுவார்த்தைகளின் அடுத்தக் கட்டம், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. செறிவூட்டல் நடவடிக்கைகளுக்கு நீண்ட காலத் தடை விதிக்க அமெரிக்கா கோரியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஈரான் கணிசமாகக் குறுகிய காலக்கெடுவை கூறியுள்ளதாக தெரிகிறது.
முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதும் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
