அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்திருக்கிறது. இதற்கிடையில், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்தும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலகளாவிய அளவில் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவாது கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு தனது தூதர்கள் மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நாள் கழித்து, ஈரானியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், "எங்களிடம் வரலாம் அல்லது எங்களை அழைக்கலாம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்தப் பயணம், நடந்து வரும் போர் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பிராந்திய பதட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பு என அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் முன்னதாக நடந்த சந்திப்புகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான நிபந்தனைகளை இரு தரப்பினரும் ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.