பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, நேற்று எக்ஸ் வலைதளம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. என்றாலும், ட்ரம்ப் - மோடி சந்திப்பைவிட, மஸ்க் - மோடி சந்திப்பே அதிகம் பேசப்படுகிறது. எலான் மஸ்க் விரைவில் தனது வணிகத்தை இந்தியாவில் நிலைநாட்டுவார் என்பதே அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் சேவை, இந்தியாவில் செயலாற்ற விருப்பம் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவருடைய ஒப்பந்தத்திற்கு இந்திய அரசு உரிமை அளிக்கும் எனத் தெரிகிறது. எலான் மஸ்க் நிறுவனம், இந்திய சந்தையில் நுழையும்போது, ஸ்டார்லிங்கின் அதிக விலை நிர்ணயம் ஒரு பிரச்னையாக மாறக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
அடுத்து அவருடைய உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் டெஸ்லாவும் இந்தியாவுக்குள் நுழையக் காத்திருக்கிறது. இதற்காக, கடந்த ஆண்டு முதலே எலான் மஸ்க் முயற்சி செய்து வருகிறார். மேலும் அதற்கான முக்கிய நகரங்களையும், இடங்களையும் அவர் அப்போதே தேர்வு செய்ததாகக் கூறப்பட்டது.
டெஸ்லாவின் நுழைவு இந்திய நுகர்வோருக்கு மேம்பட்ட மின்சார வாகனங்களை அணுகுவதை வழங்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இந்திய மின்சார வாகனத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களித்தல் உள்ளிட்ட பல நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அவருடைய விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விளங்கி வருகிறது. இதன்மூலம் இந்திய சந்தைக்கு உதவுவதையும் எலான் மஸ்க் குறிக்கோளாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக, அவருடைய அனைத்து வணிகத்தையும் இந்தியாவில் நிலைநாட்ட முயற்சி மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே பிரதமர் மோடி - எலான் மஸ்க்கின் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.