"நீங்கள் இறந்துவிட்டீர்களா?" (Are You Dead?) என்ற செயலி, சீனாவில் ஐபோன் பயனர்களிடையே வைரலாகி, நாட்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டண செயலியாக மாறியுள்ளது.
இன்றைய செல்போன்களால் உலகம் விரலின் நுனிக்குள் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தீமைகள் ஒருபுறம் இருந்தாலும், நன்மைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஒரு செயலி, தனிமையில் இருக்கும் நபர்களுக்கு உதவுவதாக உள்ளது. பிபிசி அறிக்கையின்படி, சீனாவில் தனிமையில் வசிப்பவர்களிடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தை இந்தச் செயலி நிவர்த்தி செய்கிறது.
சீன மொழியில் (Si Le Me), உணவு செயலியின் பெயரைப்போல ஒலிக்கிறது. இந்த செயலியின் நடைமுறை மிகவும் எளிமையானது. இதற்கு பதிவு செய்யவோ அல்லது தனிப்பட்ட தரவைப் பகிரவோ தேவையில்லை. அவசரநிலை ஏற்பட்டால் எச்சரிக்கப்படும் ஒரு அவசர தொடர்பைச் சேர்த்தால் போதும். பயனர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செயலியில் சரிபார்க்க வேண்டும். அதாவது, பயனர்கள் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்தச் செயலியைத் திறந்து, தாங்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்.
பயனர் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், செயலி தானாகவே, அந்த பயனர் பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்ணுக்கு மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும். இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டணச் செயலியாக கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இது Demumu என்ற பெயரில் கிடைக்கிறது. இந்தக் கட்டணச் செயலியின் விலை, சீனாவில் 8 யுவானாகவும், இந்தியாவில் ரூ.99 ஆகவும் உள்ளது.
இந்தச் செயலி அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் முதல் இரண்டு இடங்களிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் முதல் நான்கு இடங்களிலும் கட்டண பயன்பாட்டு செயலிகளில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலும், இந்த செயலி பிரபலமடைந்து, தற்போது நாட்டில் இரண்டாவது அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டண செயலியாக மாறியுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 2030ஆம் ஆண்டுக்குள் இது 200 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மக்கள் தனியாக வசிப்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த செயலி வரவேற்பைப் பெற்றுள்ளது.