Gadi Eisenkot speak about arabs Reuters
உலகம்

"அரபு குடிமக்கள் இஸ்ரேலின் அங்கம்" : நெதன்யாகுவுக்கு ஐசன்கோட் பதிலடி.. வருகிறதா புதிய மாற்றம்?

இஸ்ரேலின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஐசன்கோட் அரபு குடிமக்கள் குறித்து கூறியுள்ள கருத்து உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.

Praveen Joshva L

கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு (Gadi Eisenkot) வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது. இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்துள்ளதால் இஸ்ரேல் அதிபர் அவரை பதவியேற்க அழைப்பை விடுத்துள்ளார். இதனால் அரபு கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் ஐசென்கோட் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

Gadi Eisenkot

எனினும் ஆட்சியை தக்கவைக்க நெதன்யாகு பல்வேறு கருத்துக்களையும் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அரபு கட்சிகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட்டார். ஆனால் அவரின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

அரபு கட்சிகள் ஆதரவுடன் ஐசன்கோட் பிரதமராவது உறுதியாகியுள்ள நிலையில், நெதன்யாகு வெளியிட்ட இனவாத கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் பேசிய நெதன்யாகு, அரபுக் கட்சிகள் இஸ்ரேலை ஒரு யூத நாடாக அங்கீகரிக்க மறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்தக் கட்சிகளின் உண்மையான நோக்கம் இஸ்ரேலில் உள்ள அரபு மக்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்துவது மட்டும் இல்லை, இங்கே ஒரு இஸ்லாமிய நாட்டையோ அல்லது தேசியவாத பாலஸ்தீன நாட்டையோ உருவாக்குவதே அவர்களின் நோக்கம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஐசென்கோட், மொத்த இஸ்ரேலின் குடிமக்களில் அரபுக்கள் 21 சதவீதம் உள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் ஒரு அங்கம். ஆனால்,தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்தே, அவர்கள் இனவெறி மற்றும் வன்முறை கலந்த, சட்டபூர்வமான உரிமைகளை மறுக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும் இஸ்ரேலின் பிரதமர் தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்குமான பிரதமர் ஆவார். அரபுக் குடிமக்களை ஓரங்கட்டுவதும், அவர்களை அவதூறு செய்வதும் தேசத்திற்கு எதிரான செயல் என்றும், மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களிலேயே ஒரு பிரிவினரைத் துன்புறுத்தும் செயல்கள் இனி ஒருபோதும் நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.