உக்ரைன் போர்க்களத்தில் புதின் படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்திப்பதாகவும், முன்னோக்கி தாக்குதல் உத்தி காரணமாக ரஷ்யாவின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் GCHQ இயக்குநர் ஆனி கீஸ்ட் பட்லர் கூறியுள்ளார். இரு தரப்பும் அதிகாரபூர்வ எண்ணிக்கைகளை வெளியிடாத நிலையில், நடுநிலை ஊடகங்கள் இரு தரப்பிலும் மொத்த உயிரிழப்பு 10 லட்சத்தை எட்டியிருக்கலாம் என மதிப்பிடுகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போதும் போர் தீவிரமாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கிய நிலையில், நேட்டோ அமைப்பும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
இதனால் ரஷ்யா பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில், ரஷ்யாவுக்கு சீனா பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா நேரடியாக களத்தில் குதித்து அந்நாட்டுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரம் வடகொரியா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பல லட்சம் ராணுவ வீரர்கள் இந்த போரில் இறந்துள்ளதாக உக்ரைன் தொடர்ந்து கூறி வருகிறது.
அந்த வகையில் தற்போது பிரிட்டனின் சைபர் மற்றும் மின்னணு உளவுத்துறை அமைப்பான GCHQ-ன் இயக்குநரான ஆனி கீஸ்ட் பட்லர் (Anne Keast-Butler), 2022-இல் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரில் இதுவரை சுமார் 5 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் முதல் முறையாக வெளிப்படையாக இந்த கருத்தை கூறியுள்ளதால் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆனி கீஸ்ட் பட்லர் தனது உரையில், உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படைகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும், முன்னோக்கி தாக்குதல் நடத்தும் உத்தியால் ரஷ்யாவின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தங்கள் வீரர்களின் உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே நேரம் பல நடுநிலை ஊடகங்களும் உக்ரைன் ராணுவத் தரப்பில் இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கலாம் என்றும், ரஷ்யா தரப்பில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.