உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, ஆப்பிள். இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் தயாரிப்பின் போன்களை வாங்குவதற்கென்று எண்ணற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகள் விரித்து தனது வணிகத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் (குபெர்டினோ) உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் தொண்டு செய்தால், அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் மேட்சிங் கிராண்ட்ஸ் என ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆப்பிள் பணியாளர் நன்கொடை அளித்தால், அதன் ரசீதைக் காட்டி, அந்த நன்கொடை தொகையை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், நன்கொடை தொகைக்கு வரி விலக்கும் உண்டு. அதன்படி, அங்கு பணிபுரியும் சிலர், தங்கள் சொந்த தொண்டு நிறுவனத்துக்கே நன்கொடை அளித்து, அதன் ரசீதைக் காட்டி, நிறுவனத்திடம் இருந்து நன்கொடை தொகையைப் பெற்றுள்ளனர்.
இதில் சந்தேகம் கொண்ட ஆப்பிள் நிறுவனம் அதுகுறித்த ஆய்வில் இறங்கியுள்ளது. அப்போதுதான் இந்த மோசடி பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இவ்வாறான மோசடி மூலம் 3 ஆண்டுகளில் சுமார் 1.52 லட்சம் டாலர் (ரூ. 1.30 கோடி) மோசடி செய்த 6 பேர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வகையான மோசடியில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில ஊடகங்கள் இதன் எண்ணிக்கை 185 எனக் கூறுகின்றன.
ஆனால், பணிநீக்கம் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அதேநேரத்தில், இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சமூக அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது, இருப்பினும் இந்த விவரம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்கள்தான் தங்களுடைய தொண்டு நிறுவனங்களுக்கு அந்தத் தொகையை மாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கியமான அந்த 6 மோசடியாளர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.