Apache helicopter Reuters
உலகம்

அப்பாச்சி ஹெலிகாப்டர் காலி.. சவுதிக்கு எதிராக ஹவுதிக்களின் அதிரடித் தாக்குதல்?

நஜ்ரான் பகுதியில் சவுதி ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தகவல்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிக்களுக்கும் இடையிலான மோதல் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து வசதிகள் மற்றும் எரிசக்திக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்தச்சூழலில் தான், சவுதி அரேபியாவின் 2 அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர். சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நஜ்ரான் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவலை சவுதி அதிகாரிகள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

Apache helicopter

ஹவுதி படைகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, சவுதி – ஏமன் எல்லைப் பகுதியில் தங்களது நிலைகளைக் குறிவைத்த ஹெலிகாப்டரைத் தங்களது படைகள் வீழ்த்தியதாகக் கூறியுள்ளார். இந்தத் தகவல் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஏமனின் சபா செய்தி நிறுவனத்திலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஹவுதிக்கள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப் படை அறிவித்துள்ளது. தென்மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள கமீஸ் முஷைத் நகரை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் பறந்த நான்கு ட்ரோன்களையும் இடைமறித்து அழித்ததாகக் கூட்டுப் படை தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல் அபாயம் காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

வடக்கு ஏமனில், ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஏவுதளங்களையும் வான்வழித் தாக்குதல் மூலம் அழித்ததாகக் கூட்டுப் படை தெரிவித்துள்ளது.