ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி ஒருபுறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்தப் பதவிக்கான தேர்வு எப்படி நடைபெறுகிறது என்று இங்கு பார்ப்போம்.
ஐநா சபையின் பொதுச் செயலராக 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அண்டோனியோ குட்டரெஸ். இருமுறைக்கு மேல் ஒருவர் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்ற சூழலில், குட்டரெஸின் இரண்டாம் பதவிக்காலமும் நிறைவடைவதால், புதிய பொதுச் செயலரைத் தேர்ந்தெடுக்கும் வேலை தொடங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி ஒருபுறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்தப் பதவிக்கான தேர்வு எப்படி நடைபெறுகிறது என்று பார்க்கலாமா? உலகின் 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்த அளவில் பொதுச் செயலரே அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். பொதுச் செயலர் பதவிக்கான வேட்பாளர்களை ஐ.நா. உறுப்பு நாடுகள் பரிந்துரைக்கும். இப்பதவி பொதுவாக ,பிராந்தியங்களுக்கு இடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. ஆக, அந்தப் பின்னணியையும் கருத்தில்கொண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய வாக்கெடுப்புகள் மூலம் ஒருமனதாக ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும். ஆதரவு, எதிர்ப்பு, கருத்து இல்லை என மூன்றில் ஏதேனும் ஒரு வாக்கினை உறுப்பினர்கள் பதிவுசெய்யலாம்.
ஆனால், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் எனும் நிராகரிக்கும் அதிகாரம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் பொது வேட்பாளரை ஏற்கவேண்டும். அவர்களில், ஒருவர் நிராகரித்தால்கூட அந்த வேட்பாளரால் முன்னகர முடியாது; ஆக, இந்த ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள ஒன்பது நாடுகளின் ஆதரவு வாக்கைப் பெற்ற வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அந்தத் தீர்மானத்துக்கு ஐநா பொது அவை ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஐநாவின் அடுத்த பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். ஆக, ஐநா பொதுச் செயலர் யார் என்பதை மறைமுகமாகத் தீர்மானிப்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள்தான். குறிப்பாக, வீட்டோ அதிகாரம் பெற்ற அதன் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள். அதனால்தான் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து தனக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது இந்தியா.