40 Palestinians should be killed Reuters
உலகம்

வெளிப்பட்ட இஸ்ரேலின் கோர முகம்.. தினம் 40 பாலஸ்தீனியர்கள் டார்கெட்.. கண்டிக்கும் உலக நாடுகள்!

தினமும் 40 பாலஸ்தீனியர்களை கொலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அமைச்சர் பகிரங்கமாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. இந்த ஆண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பாலஸ்தீன மக்களுக்கான உரிமைகள் மற்றும் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் போர் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

Itamar Ben-Gvir

குறிப்பாக, தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவளிக்கும் வலதுசாரிகள் பாலஸ்தீனியர்கள் மீது கடும் வெறுப்புப் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான இடமார் பென்-க்விர் (Itamar Ben-Gvir) பேசிய கருத்து உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'ஒட்சுமா' (Otzma Yehudit) என்ற வலதுசாரி கட்சித் தலைவரான பென்-க்விர், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்த வேண்டும் என்றும், தினமும் இரவில் 30 முதல் 40 பாலஸ்தீனியர்களைக் கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gaza

மேலும் காஸா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் எவ்வித இரக்கமும் காட்டக் கூடாது என்றும், பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இஸ்ரேல் அரசின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சவுதி அரேபியா, கட்டார், எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பென்-க்விரினுடைய தூண்டுதல் பேச்சுகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தீவிரவாத அணுகுமுறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இஸ்ரேல் அமைச்சரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.