இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதே நேரம் இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட் லிஸ்ட் (joint List ) மற்றும் ராம் (Ra'am) கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
120 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களை வெல்லும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற சூழலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இஸ்ரேலில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில் தயக்கம் காட்டும் நிலையில், அங்கு புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்து ஆட்சியமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள யாயிர் கோலன் (Yair Golan) தலைமையிலான இடதுசாரிகள் அரபு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்று கூறியுள்ளன. மேலும், நெதன்யாகு ஆட்சியை வீழ்த்த வெளியில் இருந்து ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக அரபு கட்சியான ஜாய்ண்ட் லிஸ்ட் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் (Hebrew University of Jerusalem) மற்றும் சேனல் 12 ஆகியவை இணைந்து புதிய அரசு எப்படி அமையவேண்டும் என்பது குறித்து மக்களின் மனநிலையை அறிய ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. அதில், பெரும்பாலான வாக்காளர்கள் அரபு கட்சிகளுடன் இணைந்து காடி ஐசென்காட் தலைமையில் ஆட்சியமைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அரபு கட்சிகளான ராம் கட்சியின் ஆதரவுடன் ஐசன்கோட் அரசை அமைக்க வேண்டும் என்றும், ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி வெளியிலிருந்து அந்த அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் 60% வாக்காளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் 37% பேர் அமைச்சரவையில் எதிர்க்கட்சிகள் இடம்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதே நேரம் 20 % மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் எதிர்க்கட்சி வாக்காளர்கள் என்று கூறப்படும் நிலையில், பெரும்பாலான இஸ்ரேலிய மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த கருத்து கணிப்பு முடிவுகள் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.