அமெரிக்கா எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா|ரூ.52 கோடி ஏலம்போன ஒற்றை வாழைப்பழம்..ரூ.29க்கு விற்றவர் கண்ணீர்விட்டு அழுகை.. நடந்ததுஎன்ன?

அமெரிக்காவில் ரூ.52 கோடிக்கு ஏலம்போன ஒற்றை வாழைப்பழத்தை வெறும் ரூ. 29க்கு விற்ற பழ வியாபாரி ஒருவர், தற்போது அதன் ஏலம்போன தொகையைக் கேட்டு கண்ணீர் வடித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல மையம் ஒன்று கடந்த வாரம் நடத்திய ஏலத்தில், சுவரில் டேப் போட்டு ஒட்டிவைக்கப்பட்ட வாழைப்பழம் ( ஒரு கருத்தை சொல்லும் படைப்பு) ஒன்று, சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.52 கோடி) ஏலம் போனது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு அந்த ஒற்றை வாழைப்பழம் ஏலம் போனதால், உலகம் முழுவதும் பேசுபொருளானது.

இத்தாலியைச் சேர்ந்த பிரபல கைவினைக் கலைஞரான மொரிசியோ கட்டெலன் என்பவர், இதுபோன்று வாழைப்பழத்தை சுவரில் ஒட்டி ஏலம் விட்டிருந்தார். அவர், இப்படி பல வித்தியாசமான படைப்புகளை உருவாக்கி ஏலத்தில் வைப்பார். தன்னுடைய இந்த படைப்புக்கு ‘காமெடியன்’ என வைப்பார்.

காமெடியன் என்ற இந்தப் படைப்பின் அடிப்படை சாரம்சம் அதன் கருத்தில் தான் அமைந்துள்ளதே தவிர வாழைப்பழத்தில் அல்ல. இதனை வாங்குபவர்கள், வாழைப்பழத்தையும் டக் டேப்பையும் மட்டும் வாங்கவில்லை. அதனை மறு உருவாக்கம் செய்யும் அறிவுசார் உரிமையையும் பெறுகின்றனர். இந்தப் படைப்பு கலைக்கும்

கடந்த முறையும் அவர் இதேபோன்று செய்திருந்தார். அதன் வரவேற்பை அடுத்த இந்த முறையும் அதேபோன்று செய்துள்ளார். ஆனால், இந்த முறை வாழைப்பழம் கூடுதல் விலைக்கு ஏலம் போகியுள்ளது. அதேநேரத்தில், கடந்த முறை அவர் ஒட்டிவைத்திருந்த வாழைப்பழத்தை, பார்வையிட வந்த ஒருவர் எடுத்துச் சாப்பிட்டுவிட்டார். பின்னர், அதற்குப் பதிலாக வேறொரு வாழைப்பழத்தை ஒட்டி வைத்ததுடன், அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பழத்தை ஏலம் எடுப்பவர், எதிர்காலத்தில் அதேபோன்று வாழைப்பழத்தை சுவரில் ஒட்டி அதை 'comedian' எனப் பெயரிடுவதற்கான காப்புரிமையும் அவருக்கு வழங்கப்படும். அந்த வகையில், எதிர்காலத்திற்கான காமெடியன் உரிமையை, சீனாவைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன் என்பவர் பெற்றுள்ளார். இவருக்கு, டாலர் 1.4 பில்லியன் அளவுக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளன. அவர்தான், அந்த ஒற்றை வாழைப்பழத்தை ரூ.52 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். முன்னதாக, 8,00,000 டாலரில் தொடங்கிய இந்த ஏலத்தில் 6 பேர் கலந்துகொண்டனர்.

சரி, இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வாழைப்பழத்தை வெறும் ரூ. 29க்கு விற்ற பழ வியாபாரி ஒருவர், தற்போது அதன் ஏலம்போன தொகையைக் கேட்டு கண்ணீர் வடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசிக்கும் வங்காளதேச குடியேற்றக்காரரான ஷா ஆலம் என்பவர் இந்தப் பழத்தை, கட்டெலனுக்கு விற்றுள்ளார். 74 வயதான அவர், பழக்கடை ஒன்றில் ஒருமணி நேரத்திற்கு டாலர் 12 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். வாரத்தில் நான்கு நாட்கள் 12 மணிநேர ஷிப்டுகளில் வேலை செய்துவருகிறார்.

இந்த நிலையில் அந்த ஒற்றை வாழைப்பழம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறித்து அவரிடம் ’நியூயார்க் டைம்ஸ்’ என்ற ஊடகம் பேட்டியெடுத்துள்ளது. அதைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத அவர், ”நான் ஓர் ஏழை. என்னிடம் இவ்வளவு பணம் இருந்ததில்லை; இதுவரை நான் அத்தகைய பணத்தையும் பார்த்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட, ரூ.52 கோடி ஏலம் எடுத்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், அவரிடமிருந்து1 லட்சம் வாழைப்பழங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ”அது, உலகம் முழுவதும் இலவசமாக விநியோகிக்கப்படும்” எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், அவருக்கு உதவும் வகையில், GoFundMe எனும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். 6 மில்லியன் டாலர்களை எவ்வாறு சம்பாதிப்பது என்பதைக் கேட்கக்கூடிய நபர்கள் வாழும் ஒரு நகரத்தில் நாமும் வாழ விரும்புகிறோமா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், உடனடியாக அவருக்கு $15,296 (ரூ.12.93 லட்சம்) வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். ”அடுத்த வாரம் அவரைக் கண்டுபிடித்து இந்த உதவியை நான் அவருக்கு வழங்கி, அதை வீடியோ எடுப்பேன்” என உறுதியளித்துள்ளார்.