வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதனையடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன்காரணமாக, அந்நாட்டு சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது.
அதன்படி, கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 11 வங்கதேச இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று வங்கதேச இந்து இளைஞர் ஒருவர், அவமானப்படுத்தப்பட்டதற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டத்தின் திராய் உபாஜில்லா பகுதியில் வசித்து வந்த ஜாய்மகாபாத்ரோ, இந்திய மதிப்பில் 4 ஆயிரம் ரூபாய் விலை கொண்ட மொபைல் போனை அம்ருல் ஸ்லாம் என்ற கடைக்காரரிடம் வாங்கியுள்ளார்.
3ஆயிரத்து 500 ரூபாய் வரை கொடுத்த நிலையில் நிலுவையைத் தர ஜாய் மகாபாத்ரோ சென்றபோது கடை உரிமையாளர் அவரை தாக்கி அவமதித்ததுடன், மொபைல் போனையும் பறித்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாய் மகாபாத்ரோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாருக்குப்பின் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.