கடந்த சில ஆண்டுகளாக AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் இந்த துறையில் openAI நிறுவனத்தின் ChatGpt மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கூகிள் நிறுவனம் ஜெமினி என்ற AI மென்பொருளையும், எலான் மஸ்க்கின் நிறுவனம் Grok என்ற AI மென்பொருளையும் அறிமுகப்படுத்தியது. இது தவிர ஏராளமான AI மென்பொருள்கள் உலகளவில் உருவாக்கப்பட்டு கொண்டே வருகின்றன.
இந்த AI மென்பொருள்கள் மனிதர்களின் வேலைகளை பறித்துக்கொள்வதாக தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தலாக வரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப நிறுவனங்களான OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன், Google DeepMind நிறுவன தலைவர் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் Anthropic நிறுவன தலைவர் டாரியோ அமோடெய் ஆகியோர் ஒரு கூட்டு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அதில் AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தினால், மனிதர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான உயிரியல் ஆயுதங்கள் மற்றும் புதிய வீரியமிக்க கிருமிகளை மிக எளிதாக உருவாக்கிவிட முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஏனெனில் இந்த துறையில் மனிதர்களை விட AI தொழில்நுட்பங்கள் சிறப்பாக செய்லபடுகின்றன என்றும், இதனை தடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாக புதிய மற்றும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.