Ai காலர் Ai
உலகம்

பூனை, நாய்களின் ஒலியை மொழிபெயர்க்கும் AI காலர்.. சீனா நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!

உங்கள் செல்லப்பிராணிகள் என்ன நினைக்கின்றன, என்ன சொல்ல முயல்கின்றன என்பதை இனி தெரிந்துகொள்ளலாம் எனக் கூறி, சீனாவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய AI தொழில்நுட்பக் கழுத்துப் பட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Premkumar S

ஹாங்ஷோவைச் சேர்ந்த மெங் சியாவோயி (Meng Xiaoyi) என்ற சீன தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ஒரு புதிய செல்லப்பிராணி மொழிபெயர்ப்புக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. மே 15 ஆம் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மே 30 தேதி முதல் சந்தைக்கு வரவிருப்பதாகவும் இந்தக் கருவியின் ஆரம்பவிலை, இந்திய மதிப்பில் 11 ஆயிரம் ரூபாய் என அந்த நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், செல்லப்பிராணிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் AI காலர் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ai காலர்

உங்கள் செல்லப்பிராணி என்ன சொல்கிறது என்பதை இந்தக் கருவி புரிந்துகொள்ள உதவும். நாய் குரைக்கும் சத்தம், பூனை மியாவ் செய்வது, அவற்றின் உடல் அசைவுகள், மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை இந்த AI காலர் பதிவு செய்து ஆய்வு செய்கிறது. பின்னர், அந்த தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்து மொபைல் செயலியில் காட்டும். உதாரணமாக, “எனக்கு பசி”, “எனக்கு பயமாக இருக்கிறது”, “வெளியே செல்ல வேண்டும்” அல்லது “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” போன்ற உணர்வுகளை இந்த சாதனம் வழியாக ஏறக்குறைய 95 சதவீத துல்லியத்துடன் கண்டறிய முடியும் என அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

தொடர்ந்து, அந்நிறுவனம் தனது யூடியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், பல்வேறு நாய்களும், பூனைகளும் ”மொழிப்பெயர்ப்பு AI காலரை” அணிந்திருக்கின்றன. அப்போது, ஒரு பூனை மேலே பார்த்து மியாவ் என கத்துகிறது. அப்போது, அந்த காலர் “நான் விளையாட விரும்புகிறேன்” என மொழிபெயர்த்து தருகிறது. தொடர்ந்து, இந்த மொழிப்பெயர்ப்பு கருவியைப் பயன்படுத்தி உங்கள் செல்லப்பிராணியுடன், நீங்களும் பேசலாம். அதை, அந்த காலர் செல்லப்பிராணிகளுக்கு ஏற்ற மொழியில் அதை புரிய வைக்கும் என அந்த AI காலரை உருவாக்கியுள்ள மெங் சியாவோயி என்னும் சீன நிறுவனம் கூறியிருக்கிறது.

எனினும், இந்தக் கருவி உண்மைத் தன்மையானதாக இல்லை எனவும் மே 30-ல் இந்தக் கருவி சந்தைக்கு வந்த பிறகே இதைப் பயன்படுத்தும் பயனர்களால் உண்மைத் தன்மை அறியப்படும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் கருவி சரியாக செயல்படும் பட்சத்தில், நமது செல்லப்பிராணிகள் என்ன பேசுகின்றன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். தொடர்ந்து, இந்தக் கருவியை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.