kunar river x page
உலகம்

இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானும் தண்ணீரை நிறுத்தத் திட்டம்.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடியா?

இந்தியாவைத் தொடர்ந்து, தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தான் அரசும், அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

இந்தியாவைத் தொடர்ந்து, தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தான் அரசும், அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பேர் அப்பாவி பொதுமக்கள் 26 பேரைச் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மேலும் விரிசலடைந்தது. தவிர, மூன்று மேற்கு நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்ளும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்திவைத்தது. இந்த நிலையில், இந்தியாவைத் தொடர்ந்து, தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தான் அரசும், அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் அந்நாட்டின் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானும் ஆப்கானும் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த இரு அண்டை நாடுகளும் 2,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ’துராந்த் கோடு’ என அறியப்படும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லைப் பகுதியில் வேலி அமைப்பது தொடர்பாகவும் இரு தரப்புக்கிடையே மோதல் இருந்தது. இந்த நிலையில்தான் இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதலைத் தொடர்ந்தன. இந்த தாக்குதலில் இருதரப்பிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று போர் நிறுத்தம் அமலானது. இந்தச் சூழலில்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டுவதை விரைவில் தொடங்கவும், உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உச்ச தலைவர் அகுண்ட்சாதா அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லை மோதலுக்குப் பிறகு இத்தகைய நடவடிக்கையை ஆப்கான் அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, தாலிபன் ஆட்சியின் இந்த முடிவு வெளிவிவகார அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தாகி, இந்தியாவிற்கு வருகை தந்த, ஒரு வாரத்திற்குப் பிறகு வந்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் முறையான இருதரப்பு நீர் பகிர்வு ஒப்பந்தம் எதுவும் இல்லை. அதேநேரத்தில், 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டின் நீர் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். நாட்டின் நதி அமைப்புகளை எரிசக்தி உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் அண்டை நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அணை கட்டுமானம் மற்றும் நீர் மின் மேம்பாட்டுக்கான திட்டங்களை துரிதப்படுத்தி வருகின்றனர்.

kunar river

480 கி.மீ நீளமுள்ள குனார் நதி, வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைகளில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள புரோகில் கணவாய் அருகே உருவாகிறது. இது குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் வழியாக தெற்கே பாய்ந்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடந்து, ஜலாலாபாத் நகருக்கு அருகில் காபூல் நதியில் கலக்கிறது. குனார், பாகிஸ்தானில் ’சித்ரால் நதி’ என்று அழைக்கப்படுகிறது. குனார் நதி பாயும் காபூல் நதியானது, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய எல்லை தாண்டிய நதியாகும். காபூல் நதி அட்டோக் அருகே சிந்து நதியுடன் இணைகிறது மற்றும் பாகிஸ்தானின், குறிப்பாக அதன் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் நீர்ப்பாசனம் மற்றும் பிற நீர் தேவைகளுக்கு முக்கியமானது. குனார் நதியின் நீர் ஓட்டம் குறைந்தால் அது, பஞ்சாபிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.