பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல்... முடிவுக்கு வருமா பதற்றம்?
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் காயமும் அடைந்துள்ளனர். அங்கு தற்போது என்ன நிலவரம் என பார்க்கலாம்...
கடந்த வாரம் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளை தொடர்ந்து தலிபான்கள், பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்கள் ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் , தற்போது, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காபூலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் , ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் இராணுவத்தின் கூற்றுப்படி, அதன் படைகள் ஸ்பின் போல்டாக் பகுதியில் குறைந்தது 40 தலிபான்களைக் கொன்றதாக கூறி இருக்கிறது. மேலும் , அந்த பகுதிகளில் காயமடைந்தவர்களில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு தலிபான் பயிற்சி மையம் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் இராணுவம் அதன் எல்லையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர் . தென்மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள இரண்டு முக்கிய எல்லைச் சாவடிகளைத் தலிபான்கள் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியும் இருக்கிறது.
மறுபுறம்,பாகிஸ்தான் படைகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியதாகவும், பல புறக்காவல் நிலையங்கள், ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் கூறி இருக்கிறது. செர்பியாவிலிருந்து பாகிஸ்தான் வாங்கிய, தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் T-55 டாங்கின் மீது தலிபான்கள் சவாரி செய்வதைக் காட்டும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மோசமடைந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ஐஎஸ்ஐ தலைவர் மற்றும் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தான் நுழைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது, அவர்களின் விசா கோரிக்கைகளை பல நாட்களில் மூன்று முறை நிராகரித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்துள்ளது.
மோதல் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததாலும் , பாகிஸ்தான் அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதை ஆப்கானிஸ்தான் மறுத்ததாலும், பாகிஸ்தான் தற்போது கத்தார் மற்றும் சவுதி அரேபியாவை மத்தியஸ்தராக செயல்பட அழைத்துள்ளது. முன்னதாக, சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் வேண்டுகோள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரம் போர் நிறுத்தப்பட்டது, பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது .