selling their own daughters for food Reuters
உலகம்

உணவுக்காக மகளையே விற்கும் கொடுமை: அதிர்ந்து போன உலக நாடுகள்|அமெரிக்காவின் முடிவால் மாறிய வாழ்க்கை!

உணவுக்காக மகளையே விற்கும் கொடூரமான நிலை ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ளது.

Praveen Joshva L

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் பின்னர் பெண்களுக்கு எதிரான தடைகள், பொருளாதார உதவிகள் நிறுத்தம், வறுமை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மகள்களை விற்பனை செய்யும் கொடுமை உருவாகியுள்ளது. ஐ.நா உலக நாடுகளை உதவ கோருகிறது.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட அமைப்பான தாலிபான் அமைப்பு, கடந்த 1991-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்தி தலைநகர் காபூலை கைப்பற்றி அங்கு ஆட்சியில் அமர்ந்தது. அதன்பின்னர் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின்போது ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவு கொடுத்ததாக அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தாலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து அமெரிக்க ஆதரவு அரசு ஆப்கானிஸ்தானில் அமைந்தது. எனினும் அங்கு தொடர்ந்து தாலிபான் அச்சுறுத்தல் இருந்ததால் அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டன. இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. அதன்பின்னர் மீண்டெழுந்த தாலிபான்கள் அங்கிருந்த அரசை வீழ்த்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பின்னர் தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.

இதனைக் காரணமாக காட்டி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பொருளாதார, உணவு உதவிகளை உலகின் பல்வேறு நாடுகளும் ரத்து செய்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு வறுமை தலைவிரித்தாடுகிறது.

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆஃப்கானிஸ்தானில் 2.8 கோடி மக்கள் கடும் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் ஆஃப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியுதவி 16.5% வரை குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதிப் பற்றாக்குறை காரணமாக 440-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என்றும், அந்த நாட்டின் 40 % மக்கள் குடிநீர் கூட இல்லாமல் வாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவ வேண்டும் என்றும் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே வறுமை காரணமாக ஆப்கானிஸ்தானில் சிறு வயது மகள்களை திருமண வரதட்சணையை பெற்று வயதானவர்களுக்கு திருமணத்துக்காக விற்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்பு விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும் கார்டியன் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது போன்ற நிலை காரணமாக சிறு வயதில் கர்ப்பமாகி குழந்தை பிறப்பின்போது தாய், சேய் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இது ஆப்கானித்தானின் கோர நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.