பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் IMF, உலக வங்கி? 1953-க்கு பின் நடந்த மாற்றம்! இந்தியாவுக்கு சிக்கலா?
பாகிஸ்தான் IMF மற்றும் உலக வங்கியின் ஆளுநர் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, 1953க்கு பின் இரண்டாவது முறையாக இந்த பதவியை பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானின் இந்த சாதனை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவிற்கு சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1944-ம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் நிதி மற்றும் நாணய மாநாட்டில் IMF என அழைக்கப்படும் (International Monetary Fund - IMF) சர்வதேச நாணய நிதியம் என்ற அமைப்பும் உலக வங்கியும் உருவாக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு கடன்களை வழங்கி சர்வதேச நாடுகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையில் இந்த இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.
தற்போது 190 உறுப்பு நாடுகளோடு இயங்கும் IMF அமைப்பு இதற்கு முன்னர் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடன்கள் வழங்கி அந்த நாடுகளின் பொருளாதார சிக்கல்களை தீர்த்து வைத்துள்ளது.
பல்வேறு பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும் IMF அமைப்பிடம் இருந்து ஏராளமான அளவு கடன் பெற்றுள்ளது. அதாவது IMF அமைப்பிடம் மிக அதிகளவில் கடன் நிலுவை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் உலகளவில் 4-வது இடத்தில் உள்ளது. அதே போல உலக வங்கியிடம் இருந்தும் பல மில்லியன் டாலர்கள் கடன் வாங்கியுள்ளது.
இந்த சூழலில் இப்படி பல மில்லியன் டாலர் கடன் வைத்துள்ள பாகிஸ்தான் அந்த அமைப்புகளின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற IMF மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த அமைப்புகளின் 'ஆளுநர் குழுவின் தலைவராக' (Chair of the Board of Governors) பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் அஹத் கான் சீமா (Ahad Khan Cheema) இந்த உயர்மட்டக் குழுவின் தலைவராகப் செயல்படுவார் எனவும், இது பாகிஸ்தானின் பொருளாதார வரலாற்றுச் சாதனை எனவும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படும் நிலையில், 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. உலக வங்கி மற்றும் IMFஅமைப்பின் ஆளுநர் குழுவின் தலைவரே இந்த அமைப்புகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்கும் ஆண்டு மாநாட்டை தலைமை ஏற்பார். மேலும் கொள்கை முடிவுகள், வாக்கெடுப்புகள் மற்றும் தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்கும் உரிமையும் இவருக்கு உண்டு.
எனினும் எந்த நாட்டிற்கு எவ்வளவு கடன் வழங்க வேண்டும் என்ற முடிவை இவர் எடுக்க முடியாது என்பதால் இது வெறும் அலங்காரப் பதவியாகவே கருதப்படுகிறது. இதனால் இந்த அமைப்பின் ஆளுநர் குழுவின் தலைவர் பொறுப்புக்கு பாகிஸ்தான் வந்துள்ளது இந்தியாவுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.
இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் சி. டி. தேஷ்முக் (C. D. Deshmukh), 1950-ஆம் ஆண்டில் இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒரு காலத்தில் IMF அமைப்பிடம் கடன்பெற்ற நாடாக இருந்த இந்தியா 2001-ம் ஆண்டு முழு கடனை திரும்ப கொடுத்து, தற்போது IMF அமைப்புக்கு நிதி பங்களிப்பு அளிக்கும் உறுப்பு நாடாக உயர்ந்துள்ளது.அதே நேரம் உலக வங்கியிடம் இருந்து இந்தியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து கடன் வாங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

