ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் ஒரு சிறுவன் விமானத்தின் வெளிப்பகுதியில் பயணித்து வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காபூலில் இருந்து டெல்லிக்கு காம் ஏர் விமானம் வந்த நிலையில், அதன் சக்கர பகுதியில் உள்ள சிறு அறை போன்ற பகுதியில் அச்சிறுவன் பதுங்கியிருந்ததாக தெரிகிறது. விமானம் இறங்கியவுடன் தரையில் இறங்கி நடந்து சென்ற அச்சிறுவனை பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். அச்சிறுவனுக்கு 13 வயது மட்டுமே என்பதால் நேரடியான சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. சிறுவன் எதற்காக விமானத்தில் வெளிப்பகுதியில் தொற்றிக்கொண்டு வந்தான் என்பது தெரியவில்லை.
அதே நேரம் 94 நிமிடங்கள் வெளியே தொற்றிக்கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது என்பதுடன் சாத்தியமும் இல்லை என்ற நிலையில் இப்பயணம் பெரும் வியப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இது காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனை செயல்முறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. தவிர, இப்படியான சந்தர்ப்பங்களில் 5இல் 1 நபர் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.