இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு.. உண்மையைக் கண்டறிந்த ஆப்கன்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களைத் துல்லியமாக அழித்தது. இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கிப் போரைத் தொடங்கியது. இதை இந்தியா வழிமறித்து அழித்தது. இதனால் இருதரப்பிலும் போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போலிச் செய்திகளையும் பாகிஸ்தான் சமூக வலைதளங்கள் பரப்பி வருகின்றன. அவற்றை, உண்மைச் சரிபார்ப்புக் குழு கண்டறிந்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதுகுறித்து, இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு இடையேயும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதில் உண்மையில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஸ்மி, “ஆப்கன் மண்ணிலும் இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவு விவகாரத் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பாகிஸ்தான் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், ஆப்கானிஸ்தானுக்கு தனது கூட்டாளி யார், எதிரி யார் என்று நன்கு தெரியும் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.