நவ்யா நாயர் இன்ஸ்டா
உலகம்

மல்லிகைப் பூவை எடுத்துச் சென்ற நடிகை நவ்யா நாயர்.. ரூ.1.14 லட்சம் அபராதம் விதித்த ஆஸி.!

மலையாள நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றபோது, ​​மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, அவர் ரூ.1.14 லட்சம் செலுத்தினார்.

Prakash J

மலையாள நடிகை நவ்யா நாயர் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றபோது, ​​மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, அவர் ரூ.1.14 லட்சம் செலுத்தினார்.

ஆஸி.யில் மல்லிகைப்பூவுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் கொண்டாட்டங்களுக்காக மலையாள நடிகை நவ்யா நாயர், மெல்போர்னுக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அதற்கு முன்னதாக அவரது தந்தை கொச்சியில் மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் ஒரு சரத்தை அவர் தலையில் அணிந்துகொண்டுள்ளார். மற்றொன்றை கைப்பையில் வைத்திருந்துள்ளார். இதற்கிடையே அவர் ஆஸ்திரேலியாவில் போய் இறங்கியவுடன், அந்த மல்லிகைப் பூவை எடுத்துச் சென்றதற்காக அபராதம் செலுத்தினார். ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியலில் மல்லிகைப் பூவும் இருந்ததையொட்டி, நவ்யா நாயருக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா தனது விவசாயத் தொழில்களை சாத்தியமான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கக் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது. அந்நாட்டிற்குள் நுழையும் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் எந்தவொரு தாவரப் பொருளையும் உடனே தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் AUD 6,600 வரை அபராதம், குற்றவியல் வழக்கு அல்லது விசா ரத்து செய்யப்படலாம். ஆஸ்திரேலிய வேளாண்மை, மீன்வளம் மற்றும் வனவியல் துறையின்படி, சர்வதேச பயணிகள் வந்தவுடன் அறிவிக்கப்பட்டால் மட்டுமே புதிய பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு செல்ல முடியும். பின்னர் இந்தப் பொருட்கள் பூச்சிகள் மற்றும் நோய்களுக்காக பரிசோதிக்கப்படுகின்றன. 28 நாட்களுக்குள் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து நவ்யா நாயர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அபராதம் செலுத்திய நவ்யா நாயர்!

இந்த அனுபவத்தை, ’அபராதம் செலுத்துவதற்கு சற்று முன்பு நடந்த நாடகம்! (sic)’ என்ற தலைப்புடன், ஓணம் பாரம்பரிய சேலை மற்றும் மல்லிகைப் பூக்களை அணிந்து கொண்ட ஒரு வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, “நான் செய்தது சட்டத்திற்கு எதிரானது. அது, நான் அறியாமல் செய்த தவறு. இருப்பினும், 15 செ.மீ மல்லிகைச் சரத்தை கொண்டு வந்ததற்கு, அதிகாரிகள் என்னிடம் AUD 1,980 (ரூ. 1.14 லட்சம்) அபராதம் செலுத்தச் சொன்னார்கள். இது ஒரு தவறுதான். அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றாலும், அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்" எனக் கூறியுள்ளார்.

navya nair

நடிகை நவ்யா நாயர் எடுத்துச் சென்ற அரை முழம் மல்லிகை சரத்துக்காக விதிக்கப்பட்ட அபராதம் வியப்பை ஏற்படுத்தினாலும், ஆஸ்திரேலியா அதன் உயிரியல் பாதுகாப்பு விதிகளை எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்பதற்கு ஆதாரமாக இது உள்ளது. அந்நாடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காட்டும் முனைப்பை இது எடுத்துக் காட்டுகிறது.

ஆஸ்திரேலியா விதிகள் சொல்வது என்ன?

ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வரக்கூடிய மற்றும் கொண்டு வரக்கூடாத பொருட்களின் பட்டியல் studyaustralia.gov.au வலைத்தளத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • அனைத்து உணவு, தாவர மற்றும் விலங்குப் பொருட்கள்

  • துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்

  • சில மருந்துகள்

  • மரிஜுவானா, கஞ்சா, ஹெராயின், கோகோயின் மற்றும் ஆம்பெடமைன்கள்

உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

australia

மேலும், புதிய அல்லது உலர்ந்த பூக்கள், புதிய பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலா பொருட்கள், தானியங்கள், விதைகள், பால் பொருட்கள், பர்பி, ரஸகுல்லா, பேடாஸ், குலாப் ஜாமுன், மைசூர் பாக், சோன் பப்டி, அரிசி, தேநீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள், செல்லப் பிராணிகளுக்குக்கான உணவு என பல பொருட்கள் தடை பட்டியலில் உள்ளன. இந்த தயாரிப்புகள் ஆஸ்திரேலியாவிற்குள் கடுமையான பூச்சிகள் மற்றும் நோய்களை அறிமுகப்படுத்தி, அதன் தனித்துவமான சூழலை அழிக்கக்கூடும் என்பதாலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, பயணிகள் எத்தகைய பொருட்களைக் கொண்டு செல்லலாம் என்பது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பயணிகள் பொருட்களை அறிவிக்கவில்லை அல்லது தவறான அறிவிப்பை வழங்கவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.