ஆஸ்திரேலியா தேர்தல் | ஆளும்கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் அல்பனீஸ்!
ஆஸ்திரேலியாவில் நேற்று (மே 3) பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் நேஷனல் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆகிறார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவில் கடந்த இருபது ஆண்டுகளில், தொடர்ச்சியாக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஒருவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இத்னிடையே, ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆன்டனி அல்பனீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.