பலுசிஸ்தான் எக்ஸ் தளம்
உலகம்

பலுசிஸ்தானில் பேசப்படும் திராவிட மொழி! - வியக்கவைக்கும் வரலாறு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திராவிட மொழியையே பேசுகிறார்கள். இதன் வியக்கத்தக்க வரலாற்றை தற்போது பார்க்கலாம்.

PT WEB

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை முதன்மை திராவிட மொழிகளாக மொழியியலாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர, திராவிட மொழிக் குடும்பத்தில் சுமார் 73 மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 250 மில்லியன் மக்கள் திராவிட மொழிகளை பேசுகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் இந்தியாவை தாண்டி இலங்கை, மியான்மர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் பிராகுயி மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாள்ர்கள்..,அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.., பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் நாடுகளுக்கு இடையேயான ஒரு மாகாணம் பலுசிஸ்தான்.

பலுசிஸ்தான்

அங்கே பலுச்சி மொழிதான் அந்த மாகாணத்தின் முதன்மையான மொழியாக இருக்கிறது. அதேவேளை, பலுசிஸ்தான் மாகாணத்தின் பிராகுய்ஸ்தான் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பிராகுயி மொழியை பேசுகிறார்கள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”’ என்னும் நூலை எழுதியவரும், வரலாற்று ஆய்வாளருமான கால்டுவெல் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபித்துள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகத்தில் தோன்றிய மொழிகளில் பிராகுயி மொழியும் ஒன்று என வரலாற்றியலாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் அழியும் காலத்தில் பிராகுயி மொழி பேசுபவர்களில் ஒரு பிரிவினர் பலுசிஸ்தானின் குடியேறி தங்களது மொழியை பாதுகாத்திருக்க வேண்டும் என்கிற கருத்தும் நிலவுகிறது.

17ஆம் நூற்றாண்டில் கலாட்டின் கானேட் என்ற பகுதி ஒரு சுதந்திர மாகாணமாக மாறியபோது, வரலாற்றில் முதல் முறையாக பிராகுயி மக்கள் தோன்றினர். அதற்கு முன்பு அவர்கள் மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கலாட்டின் கானேட் பகுதியின் மக்கள் பெரும்பாலானோர் பிராகுயி மொழியை பேசினாலும், நிர்வாக மற்றும் நீதிமன்ற மொழியாக பலூச் மொழியை மாற்ற அப்பகுதியை ஆட்சி செய்த மிர் அஹ்மத் யார் அகமத்சாய் பலோச் விரும்பினார். தற்போது பிராகுயி மொழியை 27 வகையான பழங்குடியினர் பேசுகிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிராகுயி பாகிஸ்தானை சேர்ந்த மொழி இல்லை என்பதை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்களது ஆட்சியை நிலைநாட்டியபோது கண்டறிந்தனர்

பலுசிஸ்தான்

ஆங்கிலேய ஆய்வாளரான டிரம்ப், பிராகுயி மொழியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அது திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தது என்பதை உறுதி செய்தார். தற்போதுவரை பிராகுயி மொழியில் பேசப்படும் சில வார்த்தைகளுக்கும் திராவிட மொழிகளில் பேசப்படும் சில வார்த்தைகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. எடுத்துகாட்டாக, ஆங்கிலத்தில் YOU என்ற வார்த்தை தமிழில் “நீ” என்று கூறப்படுகிறது. அதேபோல் பிராகுயி மொழியிலும் “நீ” என்பதே இதன் உச்சரிப்பாகும். மேலும், MILK என்பது தமிழிலும், பிராகுயியிலும் “பால்” என்றே உச்சரிக்கப்படுகிறது. பிராகுயி அடிப்படையில் பேச்சு மொழி என்பதாலும், அந்த மொழியை பேசுபவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள் என்பதாலும் இந்த மொழிக்கு அதிக இலக்கியப் பாரம்பரியம் கிடையாது.

மற்ற திராவிட மொழிகளில் இருந்து பல காலமாக தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக பிராகுயி மொழி அதை சுற்றியுள்ள மொழிகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது. பிராகுயி மொழியில் தற்போது 15 சதவீதம் மட்டுமே திராவிட மொழியாக உள்ளது. மீதமுள்ள சொற்கள் பலுச்சி, சிந்தி, உருது போன்ற மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

balochistan

இன்றைய சூழலில் பிராகுயி மொழி ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பால் அழிந்து வரும் மொழிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. அரசின் ஆதரவின்மை மற்றும் வாழ்வியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளால் பிராகுயி மொழி பேசும் மக்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இத்தனை காரணங்களையும் மீறி தற்போதுவரை பிராகுயி மொழி பேசப்படுவது வியப்பாக உள்ளது. பாகிஸ்தானில் சிந்து சமவெளி மற்றும் திராவிடம் ஆகியவற்றின் மொழி ஆதாரமாக பிராகுயி மொழி மட்டுமே தற்போது உள்ளது. அதை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதி மட்டுமல்லாமல், ஈரான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற பகுதிகளிலும் பிராகுயி மொழி பேசுபவர்கள் காணப்படுகிறார்கள்.