A missile launched by North Korea  Reuters
உலகம்

அதிகாலையிலேயே பறந்துவந்த ஏவுகணை.. அதிரடி காட்டிய வடகொரியா.. அரண்டுபோய் நிற்கும் ஜப்பான்!

அதிகாலையிலேயே ஜப்பானின் வான்வெளி மீது வடகொரியா ஏவிய ஏவுகணை பறந்து வந்தது அந்நாட்டு மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Praveen Joshva L

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டு நாடாகப் பிரிந்தது. இதில் வடகொரியாவுக்கு முன்னர் சோவியத் யூனியனும், தற்போது ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல தென்கொரியாவுக்கு தற்போது வரை அமெரிக்கா தீவிர ஆதரவை வழங்கி வருகிறது. மேலும் இந்த கொரிய தீபகற்பத்துக்கு அருகில் உள்ள ஜப்பானும் அமெரிக்க பாதுகாப்பின்கீழ் உள்ளது. தன்னை சுற்றி அமெரிக்க ஆதரவு நாடுகளான ஜப்பான், தென்கொரியா இருப்பதால் வடகொரியா நீண்டகாலமாக தனது ராணுவ வலிமையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், வட கொரியா தனது கிழக்கு கடற்கரையிலிருந்து ஜப்பானை நோக்கி அதிகாலையில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்ததாக ஜப்பான் கூறியுள்ளது. ஜப்பான் சமீபத்தில் தனது ராணுவ வலிமையை அதிகரிக்கும் வகையில் குருஸ் ரக ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியிருந்தது.

அதேபோல, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து அமெரிக்க-தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்தப் பயிற்சிகள் ஒரு மாதம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே வடகொரியா இந்த ஏவுகணையை அனுப்பியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Shinjiro Koizumi

இதுகுறித்து பேசியுள்ள ஜப்பானின் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி (Shinjiro Koizumi), வடகொரியாவின் ஏவுகணை அதிகாலையில் ஜப்பானின் வான்வெளி மீது பறந்ததாகவும், இது நமது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் பெய்ஜிங்கில் உள்ள தூதரக வழிகள் மூலம் வடகொரியாவிடம் இந்த தாக்குதல் குறித்து கண்டனம் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த ஏவுகணைச் சோதனை தொடர்பாக எந்த விவரத்தையும் தற்போதுவரை வடகொரியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.