Texas, America web
உலகம்

குடிநீர் இல்லாமல் போகும் முதல் அமெரிக்க நகரம்.. உலகை அதிரவைக்கும் நெருக்கடி!

டெக்சாஸ் மாநிலத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள, 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு நகரம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது; தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் அமெரிக்காவின் முதல் நகரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

PT WEB

டெக்சாஸ் மாநில கடற்கரை நகரமான கார்பஸ் கிறிஸ்டி, பல ஆண்டுகால வறட்சி, காலநிலை மாற்றம், தொழில் வளர்ச்சி, குறிப்பாக பெட்ரோகெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் ரசாயன ஆலைகளின் அதிக நீர் பயன்பாடு காரணமாக கடுமையான குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்கிறது. கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் நிதி, விதிமுறை, எதிர்ப்பு சிக்கலால் தாமதமடைந்து, நகரத்தில் சுமார் ஒரு வருடத்திற்கே நீர் சேமிப்பு உள்ளது.

செய்தியாளர் - M. மீரா

டெக்சாஸ் மாநிலத்தின் கடற்கரை நகரமான கார்பஸ் கிறிஸ்டியில் (Corpus Christi) 3,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல ஆண்டுகால வறட்சி, அதிகரித்து வரும் தேவை மற்றும் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியவற்றால் இந்நகரம் நீர் விநியோகச் சரிவைச் சந்தித்து வருகிறது.

விரைவான தொழில் வளர்ச்சியானது இந்நகரின் தண்ணீர் பற்றாக்குறைச் சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் உள்ள பெரிய பெட்ரோகெமிக்கல் ஆலைகளுக்கு அதிக அளவிலான நீர் தேவைப்படுகிறது; இது, ஏற்கனவே தீவிர வானிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Plastic factory

2022-ல் கட்டப்பட்ட பிளாஸ்டிக் ரசாயன ஆலை ஒன்று, இயந்திரங்களைக் குளிர்விப்பதற்காக மட்டும் தினமும் பயன்படுத்தும் நீரின் அளவு, கார்பஸ் கிறிஸ்டி நகர மக்கள் அனைவரும் பயன்படுத்தும் மொத்த நீரின் அளவிற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது.

கடல் நீரைப் பயன்படுத்தக்கூடிய நன்னீராக மாற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், தற்போதுள்ள நீர் விநியோகத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், நிதிச் சிக்கல்கள், விதிமுறைகள் மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக இத்திட்டம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது.

Corpus Christi

இன்சைட் கிளைமேட் நியூஸ்' பத்திரிகையின் செய்தியாளரான டிலன் பேடோர், அமெரிக்காவின் மற்ற நகரங்களை விட கார்பஸ் கிறிஸ்டி நகரம் தண்ணீர் பற்றாக்குறையை சீக்கிரமாக எதிர்கொள்ளவிருக்கிறது என்றும், சமீபத்திய மழைப்பொழிவு ஓரளவு நிவாரணம் அளித்திருந்தாலும், நகரத்தில் இன்னும் சுமார் ஒரு வருடத்திற்கான நீர் சேமிப்பு மட்டுமே உள்ளது என்றும், இது ஒரு அவசர நிலையாகக் கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதிகரித்து வரும் தேவை, காலநிலை மாற்றம் மற்றும் குறைந்து வரும் நீர் வளங்கள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த நகரங்கள் போராடுகிறது. இது உலகிற்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக பார்க்கப்படுகிறது..