israel palastine war
israel palastine war file image
உலகம்

இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்ட கர்நாடக மருத்துவர்.. பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய பஹ்ரைன் மருத்துவமனை

karthi Kg

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த மருத்துவரான சுனில் ராவ் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பஹ்ரைனில் வேலை செய்துவருகிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், ஹமாஸுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்திருக்கிறார். அதில் சில கருத்துக்கள் மத ரீதியில் சர்ச்சையாக, சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. அது அவருக்கும் பெரும் இடியாக மாறியிருக்கிறது.

தற்போது, சுனில் ராவை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது பஹ்ரைனில் இருக்கும் ராயல் பைஹ்ரைன் மருத்துவமனை. அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், " இங்கு சிறப்பு மருத்துவராக பணியாற்றும் சுனில் ராவ் சமூகத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்டிருப்பதாக அறிகிறோம்.

அவரின் கருத்துக்கள் முழுக்க முழுக்க தனிப்பட்டவை. அவரின் கருத்துக்களுக்கும், மருத்துவமனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதே சமயம், அது எங்களின் மருத்துவமனை கோட்பாடுகளுக்கு எதிரானது. அவரை உடனடியாக வேலையிலிருந்து நீக்குகிறோம் " என அறிவித்திருக்கிறது".

இந்நிலையில் "தற்போதைய சூழலில் நான் வெளியிட்ட சர்ச்சையான கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மருத்துவராக அனைத்து உயிர்களையும் பாதுக்காக்க வேண்டியது எங்களின் கடமை. இந்த நாட்டின் மக்களையும் மதத்தையும் நேசிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றி வருகிறேன்" என சுனில் ராவ் தற்போது பதிவு செய்திருக்கிறார்.

பஹ்ரைன் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், 50 வயது மதிக்கத்த ஆசிரியர் ஒருவரை கைது செய்திருக்கிறோம். மதத்துக்கு எதிரான கருத்துக்களை அவர் தெரிவித்ததால் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறோம் என அறிவித்திருக்கிறது. கைது செய்யப்பட்டது சுனில் ராவா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் , அமெரிக்காவில் 70 வயது முதியவர் ஒருவர் தன் வீட்டில் குடியிருந்த 6 வயது இஸ்லாமிய சிறுவனைக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமான இந்தப் போரில் அந்த இரு தேசங்களுக்கான போராக மட்டும் இல்லாமல், உலகம் முழுக்க இரு மதங்களுக்கு இடையேயான வெறுப்பாக மாறிவருகிறது.