அட்லாண்டிக் பெருங்கடலில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் இறுதி வரை ஹரிகேன் புயல்கள் உருவாகுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 119 கி.மீ வேகத்தைத் தாண்டிய ஹரிகேன் எதுவும் உருவாகாதது 112 ஆண்டில் முதல்முறை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சகாரா பாலைவனத்திலிருந்து வீசும் உலர் காற்று, தூசி, மேலடுக்கில் வலுவான காற்று போன்றவை புயல் தீவிரமடைவதைத் தடுத்ததாக விளக்கப்படுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களில் காற்றின் வேகம் மணிக்கு 119 கிலோ மீட்டர் என்ற எல்லையைத் தாண்டும் போது அது பேரழிவை ஏற்படுத்தும் ஹரிகேன் (Hurricane) வகை புயல்கள் என அழைக்கப்படுகின்றன. வழக்கமாக அட்லாண்டிக் பெருங்கடலில் ஆகஸ்ட் பாதியிலிருந்து செப்டம்பர் இறுதி வரை பேரழிவை ஏற்படுத்தும் ஹரிகேன் வகை புயல்கள் உருவாகும் உச்சக்கட்ட காலமாக பார்க்கப்படுகிறது. இந்த புயல்கள் அமெரிக்காவில் குறிப்பாக கரீபியன் தீவு கூட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தும்.
ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிவரை அட்லாண்டிக் பெருங்கடலில் எந்தவித ஹரிகேன் வகை புயல்களும் உருவாகாதது ஆச்சரியத்துக்குரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 112 ஆண்டுகளில் இந்த மாதங்களில் குறைந்தது ஒரு ஹரிகேன் வகை புயல்களாவது அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ளது. இதன் மூலம் 112 ஆண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஹரிகேன் வகை புயல்கள் உருவாகாத முதல் ஆண்டாக இந்த ஆண்டு பார்க்கப்படுகிறது.
அதே நேரம் 119 கி.மீ வேகத்தை விட குறைவான வெப்பமண்டலப் புயல்கள் (Tropical Storms) அட்லாண்டிக் பெருங்கடலில் உருவானாலும், அவற்றின் காற்றின் வேகம் மணிக்கு 119 கிலோ மீட்டரை தாண்டவில்லை, இதனால் ஆய்வாளர்கள் இந்த ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த அசாதாரண நிகழ்வு நடைபெற வானிலை ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து வீசிய அதிகப்படியான உலர் காற்றும் தூசியும் அட்லாண்டிக் பெருங்கடல் வளிமண்டலத்தில் பரவி, புயல்கள் தீவிரமடைவதைத் தடுத்ததாகவும், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் இருந்த வலுவான காற்று, மேகங்கள் ஒன்றாகத் திரண்டு பெரிய சூறாவளியாக மாறுவதை கலைத்து வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் நீர் சூடாக இருந்தாலும், வளிமண்டல மேலடுக்கில் நிலவிய சாதகமற்ற சூழல் புயல் வளர்ச்சியை முடக்கியதும் அட்லாண்டிக் பெருங்கடல் ஹரிகேன் (Hurricane) வகை புயல்கள் உருவாகாததற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.