istanbul airport எக்ஸ் தளம்
உலகம்

ஒரு வாழைப்பழம் ரூ.565.. மயக்கம் வரவைக்கும் இஸ்தான்புல் உணவுப் பொருட்களின் விலை!

இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை 565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுதான் பேசுபொருளாகியுள்ளது.

Prakash J

எப்போதும் ஒரு பொருளின் விலை கடைகளுக்கு மத்தியில் வேறுபடும். அதே பொருளின் விலை பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் எனில் சொல்லவே வேண்டாம். ஆனால், இவற்றைவிட அந்தப் பொருளின் விலை விமான நிலையங்களில் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், விமான நிலையத்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை 565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுதான் பேசுபொருளாகியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம். இது, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு, நாளொன்றுக்கு 2.20 லட்சம் பயணிகள் வருவதாகவும் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே இந்த விமான நிலையம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தச் சூழலில்தான் உலகளவில் உள்ள அனைத்து விமான நிலையங்களைவிட இஸ்தான்புலில் மிக அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்வதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வாழைப்பழம்

அதன்படி, இங்கு ஒரு வாழைப்பழம் ரூ.565-க்கு (5 யூரோ) விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர். மேலும், இங்கு ஒரு பீரின் விலை ரூ. 1,698க்கும் (15 யூரோ), லாசக்னா (பாஸ்தா போன்ற உணவு) 90 கிராமின் விலை ரூ. 2,376க்கும் (21 யூரோ) விற்கப்படுகிறது. தவிர, மெக்டொனால்ட்ஸ் மற்றும் பர்கர் கிங் போன்ற மலிவு விலையில் விற்கப்படும் துரித உணவுகள்கூட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, உலகின் மிகவும் விலையுயர்ந்த விமான நிலையம் என இஸ்தான்புல் பெயரெடுத்துள்ளது. இஸ்தான்புல் விமான நிலையத்தில் விற்கப்படும் அதிக விலை உயர்வு குறித்து L'Economia-வின் எழுத்தாளர் லியோனார்ட் பெர்பெரி, ”வெறும் 90 கிராம் எடையுள்ள ஒரு லாசேன், £21 (ரூ.2,376) மிக அதிகமாய் விற்கப்படுவதை நேரிலேயே கண்டேன். இது ஒரு செங்கல் துண்டுபோல உள்ளது. அதில் துருவிய சீஸ் மற்றும் ஒரு போலி-துளசி இலை போன்ற தோற்றத்தைத் தூவுகிறது. மேலும், உணவின் தரம் அதிகப்படியான விலையுடன் பொருந்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் ஏர்போர்ட்

மேலும் பயனாளி ஒருவர், “விலை அதிகமாக உள்ளது. இஸ்தான்புல்லைப் பொறுத்தவரை இது மிகவும் அதிகமானது. இது, பிராங்பேர்ட் விமான நிலையத்தைவிட 2 முதல் 4 மடங்கு அதிகம். ஆனால், விலை ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது என்பது தெரியவில்லை. இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா” எனத் தெரியவில்லை.

இஸ்தான்புல்லில் விமானம் புறப்படும் நேர மாறுபாடுகள் காரணமாக, ஒரு விமானத்தில் வந்திறங்கும் பயணி, மற்றொரு விமானத்தில் ஏறுவதற்கு, பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே, அத்தகைய சூழலில், அங்கிருக்கும் உணவகங்களில்தான் பயணிகள் சாப்பிட்டாக வேண்டும். மேலும், விமான நிலையத்தின் அழகிய உட்புற வடிவமைப்பு உள்ளிட்டவற்றைப் பார்க்கவும் அங்கு வரும் பயணிகள் விரும்புவார்கள். இஸ்தான்புல் விமான நிலைய உணவகங்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு அதீத லாபம் ஈட்டுகிறார்கள் என்று கூறப்படுகிறது.