இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன.
எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், மறுபுறம் காஸாவிற்குள் உணவுகளை அனுமதிக்காத நிலையும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பசியுடன் உணவு தேடி அலையும் பரிதாப நிலையும் அங்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குடும்பத்தில் 9 பேர் இறந்துள்ளனர். இந்த 9 பேரும் மருத்துவ தம்பதியின் குழந்தைகள் ஆவர். இவர்களில் 7 பேர் குண்டு விழுந்த உடனே இறந்துவிட்ட நிலையில் மற்ற இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர். மருத்துவ தம்பதியின் 10 பிள்ளைகளில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். தப்பித்த ஒரு சிறுவனும் அவனது தந்தையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 9 குழந்தைகள் ஒரு வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்களாவர். ஹமாதி அல் நஜ்ஜர் - ஆலா ஆகிய மருத்துவ தம்பதிகளின் குழந்தைகளே இந்த தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். அவர்கள் இருவரும், கடந்த பல நாட்களாக பல உயிர்களை போராடி காப்பாற்றிய வந்த நிலையில், தற்போது தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.