டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை web
உலகம்

இலங்கையை புரட்டிப்போட்ட ’டிட்வா’ புயல்.. 80 பேர் உயிரிழப்பு! மக்கள் அவதி!

டிட்வா புயல் காரணமாக இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதும் பெரிய அளவில் ஏற்படும் என சொல்லப்படுகிறது..

Rishan Vengai

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரழிவுகளை ஏற்படுத்தி 80 உயிரிழப்புகளும், ஆயிரக்கணக்கானோர் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது இலங்கையில் ஒரு பேரழிவின் பாதையை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் தாக்கத்தால் மிகப்பெரிய மழைபொழிவை சந்தித்த அண்டை நாடான இலங்கையில், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் 80 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

டிட்வா புயல் இலங்கை

மோசமான வானிலை காரணமாக இலங்கைக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.. இலங்கையில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு சேதத்தை டிட்வா புயல் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியா ’ஆபரேஷன் சாகர் பந்து’வின் கீழ், கப்பலில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது..

இலங்கையின் நெருக்கடியான நேரத்தில் உதவுவதற்காக இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து'வைத் தொடங்கி, இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் முதல் தவணையாக இந்தியாவின் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..

கொழும்பு மற்றும் அதற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கம்பஹா மாவட்டத்திலும் மோசமான சூழல் நிலவுவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறும், களனி மற்றும் அத்தனகலு போன்ற ஆறுகளில் தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மோசமான பேரழிவு ஏற்படக்கூடும் என இலங்கை அதிகாரிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்..

இலங்கை டிட்வா புயல்

கடைசி அப்டேட்டின் படி பேரிடர் மேலாண்மை மையம் (DMC) 80-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், கடந்த மூன்று நாட்களில் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.. மேலும் வெள்ளம் காரணமாக 44,192 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 195 தங்கவைப்பு நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..