அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அவர்களை நாடு கடத்தும் பணியில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் ஐந்தரை கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகிறது.
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதக் குடியேற்றம், நாடு கடத்தும் நடவடிக்கை, வரி விதிப்பு, விசா விதிமுறைகளில் மாற்றம், நாட்டு மக்களின் வேலை பறிப்பு, பைடன் அரசு மீது விமர்சனம், பராக் ஒபாமா கைது விவகாரம், போர் நிறுத்தம் குறித்த பேச்சுகள் உள்ளிட்டவை அதில் அடக்கம். இந்த நிலையில், அமெரிக்காவில் விசா வைத்திருக்கும் ஐந்தரை கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினரின் ஆவணங்களை அந்நாட்டு வெளியுறவுத் துறை ஆய்வு செய்து வருகிறது.
அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்குள் நுழைய அல்லது தங்க தகுதியுடையவர்களா என்பதைத் தீர்மானிக்க சரிபார்க்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இதில் ஏதேனும் முரண்பாடு காணப்பட்டால், இந்த விசாக்கள் ரத்து செய்யப்படும், மேலும் விசா வைத்திருப்பவர் அமெரிக்காவில் இருந்தால், அவர் நாடு கடத்தப்படுவார்.
விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாக தங்கியிருத்தல், குற்றச்செயல்கள், பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடுதல் அல்லது பயங்கரவாத அமைப்பை ஆதரித்தல் உள்ளிட்ட தகுதியின்மைக்கான அறிகுறிகளைத் தேடுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமையகத்திற்குள் பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்ததை அடுத்து, லாரி ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில், அமெரிக்காவில் லாரி ஓட்டுநர்கள் ஆங்கிலத்தில் பேசவும் படிக்கவும் ட்ரம்ப் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக, பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத் துறை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் எண்ணிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டில் 1.4 கோடியாக உச்சம் தொட்டதாக, பியூ ஆய்வு மையம் ((Pew Research Centre)) தெரிவித்துள்ளது. இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தில் மெக்சிகோ, குவாத்தமாலா, எல்சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதலிடத்தில்உள்ளன. வெனிசுலா, கியூபா, கொலம்பியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக பியூ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டுவந்த புதிய கட்டுப்பாடுகளால் இந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.